கிரேடு பீம்(Plinth Beam)
கிரேடு பீம்(Plinth Beam) தாங்கு திறனுக்காக அழைக்கப்படுகின்றன. பீம்கள் அனைத்து தூண்களையும் இணைப்பதன் மூலம் செயல்களை ஒருமைப்பாட்டாய் மாற்றி அவற்றை அசையாமல் ஆடாமல் பாதுகாக்கின்றன. கட்டிடத்தின் ஒட்டு மொத்த சுமை, தூண்கள் வழியே கிரேடு பீமுக்குச் செலுத்தப்படும். அதைத் தாங்கி ஃபூட்டிங் மூலம் பூமிக்கு கிரேடு பீம்கள்தான் செலுத்துகிறது. பெறும்பாலான கட்டிட விபத்துக்கள் ஏற்படக் காரணம் கிரேடு பீம் வலிமை இழப்பதுதான் காரணம். இதில் சிறு இடைவெளியோ விரிசலோ ஏற்படுமாயின் சிறிது சிறிதாக எடையைத் தாங்கும் திறனற்றுக் கட்டிடத்தின் தூண்களும், சுவர்களும் பாதிப்படையும். இதனால் கட்டிடம் உடைந்து சரியும் நிலையும் ஏற்படுகின்றன. இவ்வாறு நடக்கச் சிலகாலம் ஆகலாம் இதைச் சில அறிகுறிகள் மூலம் முன்னரே உணரலாம் சில கட்டுமானங்களில் பீம் தன்னால் இயன்ற வரையில் கட்டிடத்தின் சுமையைத் தாங்கும். மேலும் அதிக சுமை ஏற்றினால் ஒரு கட்டிடம் திடீரென்று உடைந்து உள்ளே அமுங்கிவிடும். கிரேடு பீம்கள் தற்போதைய சுமைகளுக்கும் வருங்காலத்தில் ஏற்றப்படும் அடுக்குகளையும் கணக்கில் கொண்டே அமைக்க வேண்டும். சிலர் ஒரடுக்குக்கு பீம் அமைத்து வீடு கட்டிக் குடியிருப்பர் பின்னாலில் சில அடுக்குகள் கூடுதலாக கட்ட முற்படும் பொது தகுந்த ஆய்வாளர்கள் மூலம் சோதித்து அறிவது நன்று. இதற்கு சில இடங்களில் துளையிட்டோ அல்லது சிறிது சிதைத்தோ மாதிரிகள் எடுத்து சாதனை செய்யப்படும். சிதை சாதனைகளும் (Destructive Test) சிதைக்காமல் ஊடுருவும் கதிர்கள், டிஜிட்டல் கருவிகள் கொண்டு செய்யப்படும் சிதைவுறாச் சோதனைகளும்(Non Destructive Test) உள்ளன. இன்னாட்களில் கான்கிரீட்டை இடும்போது சென்சார் ஸ்டிக்கர் பொருத்தி அதன் பிந்தைய வலிமைகளை ஆய்வு செய்யும் வழிகளும் உள்ளன. புதிய தனி வீடு கட்டுவோர் போடு மண்ணில் பீம் அமைக்கக் கூடாது. நிலபரப்பு மேல் அமைவதைவிட நிலபரப்புக்கு கீழ் அமைக்கலாம். கிரேடு பீம் அமைக்க அதற்கான தளம் முதலில் அமைக்க வேண்டும். இதை அமைக்க எளிதான வழிமுறைகளைப் பார்ப்போம். முதல் வழிமுறை 40mm கருங்கல் ஜல்லியுடன் சிமெண்ட் மணல் கலந்து இடலாம். இது நடுத்தர செலவு பிடிக்கும். அடுத்த வழிமுறை கையாளும்போது கிடைக்கும் கால் அரை செங்கற்களை உடைத்து சிமெண்ட் மணல் கலந்து இடலாம் இதில் பழைய வீடுகளில் இருந்து எடுத்த செங்கற்களை உடைத்து பயன்படுத்தக் கூடாது. அடுத்த வழிமுறை முழு செங்கற்களையோ அல்லது பிளை ஆஷ் கற்களையோ சிமெண்ட் மணல் சாந்தால் இணைத்து தூவ, நீள, அகலத்திற்குப் பரப்பிவிடலாம். இதற்குச் செலவு அதிகம் ஆனால் துல்லியமாக பீம் அமைப்பை இதில் கொண்டுவரலாம். இப்போது பக்கவாட்டு சென்ட்ரிங்க் முறைகளைப் பற்றிப் பார்க்கலாம். அனைவரும் எளிதாகச் செய்யக்கூடிய முறை இது. கம்பி கட்டிய பிறகு இரு பக்கவாட்டுகளிலும் பிளைவுட் தட்டிகளையோ, பலகையோ அமைத்து சென்ட்ரிங்க் செய்யலாம். இது எளிதான முறையாகும். அதில் தளமாக முழுச் செங்கற்களையோ அல்லது பிளை ஆஷ்கற்களையோ அமைத்தால் சரியான நேர்கோட்டில் செல்லும். கான்கிரீட் கொட்டும்போது அடியில் பிதுங்கும் வாய்ப்பு இருக்காது. பீம் கீழே அதிக அகலத்திலும் மேலே குறைந்த அகலத்திலும் ஒழுங்கற்று அமைவது தவிர்க்கப்படும். அடுத்த வழிமுறையாக முழுச் செங்கற்களையோ அல்லது பிளை ஆஷ்கற்களையோ கொண்டு பீம் நீள அகல உயரத்துக்குத் தொட்டி கட்டி அதனுள் கம்பி கட்டி கான்கிரீட் இடலாம். இதில் கான்கிரீட்டை உறுதியாக்க நெடு நேரம் தண்ணீர் காட்ட வேண்டிவரும். இதன் மூலம் செங்கல் குளிர்ந்து கான்கிரீட் ஈரப்பதமடைந்து இறுகும். இவ்வாறு செய்யும்போது தொட்டியானது பீம் கான்கிரீட்டைப் பாதுகாக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக