பத்திர பதிவு ஆவணம்
நதிமூலம் ரிஷிமூலம் பார்கக்கூடாது என்று சொல்வார்கள். கடந்து வந்த பாதை எப்படி இருந்தால் என்ன? இப்போது நன்றாக இருந்தால் அதுவே போதும் என்பது தான் பொருள்.
தத்துவத்துக்கும் ஒரு வேளை நடைமுறை வாழ்க்கைக்கும்கூட இது பொருந்தலாம். ஆனால் நீங்கள் ஒரு அசையாச் சொத்தை வாங்க விரும்பினால் இந்த வாசகம் பொருந்தாது. நதிமூலமும் ரிஷிமூலமும் பார்த்து தான் ஆகவேண்டும்.
ஒர் அசையாச் சொத்தை நீங்கள் வாங்க விரும்பும்போது சில முக்கியமான ஆவணங்களைப் பார்க்க வேண்டும். யாரிடமிருந்து சொத்தை வாங்க முடிவு செய்கிறார்கள், அவர் பெயருக்கு அந்தக் குறிப்பிட்ட சொத்து எப்படி வந்தது என்கிற ஆவணம் மிக முக்கியமானது. பொதுவாக ஒருவர் விற்பனை ஆவணம் வாயிலாகத்தான் ஒரு சொத்துக்கு உரிமையாளர் ஆகியிருப்பார். இந்த விற்பனை ஆவணம் மிக சரியான முறையில் அமைந்திருக்கிறதா என்பதை வாங்குபவர் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதாவது இந்த ஆவணம் வாயிலாகத்தான் உங்களுக்கு சொத்தை விற்க முன்வருபவர் அதை வாங்கியிருக்கிறார். அவருக்கு விற்றவர் குறிப்பிட்ட சொத்தை விற்க தகுதியானவரா என்பதை முதலில் உறுதிசெய்துகொள்ள வேண்டும். ஒரு வேளை எந்த விதத்திலாவது தனக்கு உரிமை இல்லாத சொத்தை அவர் விற்றிருந்தால் உங்களுக்கு விற்க வருகிறவருக்குச் சொத்தில் உரிமை வந்திருக்காது.
எனவே உங்களுக்கு சொத்தை விற்க முன்வருபவர் முறைப்படி சொத்தின் மீது உரிமை பெற்றிருக்கிறாரா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம். ஒருவேளை அவர் வாங்கியது இளவர் சொத்தாக இருக்கலாம் இறந்துபோனவரின் வாரிசுதாரர்கள் விற்ற சொத்தாக இருக்கலாம். அதில் எல்லா வாரிசுதாரர்களும் இணைந்து விற்காமல் இருந்திருக்கலாம். அடமானத்தில் இருந்த சொத்தை மீட்காமல் வாங்கிவிட்டிருக்கலாம். அந்தச் சொத்து தொடர்பான வழக்கு ஏதும் நடந்து கொண்டிருக்கலாம். இப்படிப்பட்ட சிக்கல்கள் எதுவுமில்லாத சொத்தா என்பதை மிகக் கண்டிப்பாக உறுதிசொய்துகொள்ள வேண்டும்.
உதாரணத்துக்கு ஒரு சம்பவம்.
தந்தை சுயமாக சம்பாதித்த பணத்தில் வாங்கிய சொத்து. தந்தை இறந்துவிட்டார். அவரது இரு மகன்களும் அந்தச் சொத்தை அனுபவித்து வந்தார்கள். இரு மகன்களும் கூட்டாகச் சேர்ந்து சொத்தை ஒரு மூன்றாம் நபருக்கு விற்றார்கள். வாங்கியவர் சொத்துத் தொடர்பான எல்லாவற்றையும் கேள்விகள் கேட்டு தெரிந்துகொண்டார். இறந்தவரின் மனைவி அவருக்கு முன்பே இறந்துவிட்டார் என்பதையும் உறுதிப்படுத்திக்கொண்டார். தற்போது சொத்தை அனுபவித்துக்கொண்டு இருக்கும் இரண்டு சகோதரர்களிடம் இருந்தும் சொத்தை வாங்கினார்.
இறந்தவருக்கு இவர்கள் இருவர் தான் வாரிசுதாரர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள தவறிவிட்டார். அதற்க்குதான் வட்டாட்சியர் (தாசில்தார்)அலுவலகத்திலிருந்து வாரிசுரிமை சான்றிதழ் வழங்குகிறார்கள். வட்டாட்சியரால் தமிழக அரசின் முத்திரையுடன் சான்றளிக்கப்பட்ட, வாரிசுரிமைச் சான்றிதழைப் பார்த்து மட்டுமே வாரிசுதாரர்களை உறுதிப்படுத்த முடியும். சூழ்நிலைக்கேற்ப, நீதிமன்றங்களை அணுகி, இறங்குரிமை சான்றிதழ்(Succession certificate) வாங்கவேண்டிய அவசியமும் நிகழலாம். நாம் குறிப்பிட்ட இந்த நிகழ்வில் வாங்கியவர் வாரிசுரிமை சான்றிதழைப் பார்காததால் இவர்கள் இருவரைத் தவிர இன்னொரு சகோதரரும் இருக்கிறார் என்று தெரியாமல் போய்விட்டது.
பல ஆண்டுகளுக்கு முன் குடும்பப் பிரச்சனையில் எனக்கு ஊங்கள் சொத்து வேண்டாம் என்று கோபத்தில் சொல்லி பிரிந்துபோய்விட்ட மகன் தந்தை இறந்தபின் சொத்தில் பாகம் கேட்காமல் இருப்பாரா என்ன? அவன்தான் சொத்தே வேண்டாம் என்று சொல்லி விட்டைவிட்டு போய்விட்டானே என்ற எண்ணத்தில் விற்றவர்களும் அதைச் சொல்லவில்லை. வாங்கியவரும் வாரிசுரிமை சான்றிதழைக் கேட்கவில்லை. அப்படியொரு நிலை வந்தபோதுதான் வாங்கியவர் தன்னுடைய தவறை உணர்ந்தார். ஆனால் அது காலதாமதமான ஓர் உணர்தல் அல்லவா?
வாரிசு சொத்துக்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் 12.12.1997 அன்று மிக ஆழமான தீர்ப்பை வழங்கியது. தன்னுடைய இளவர் மகனுக்குச் சொந்தமான அசையாச் சொத்தை ஒரு தந்தை விற்றுவிட்டார். பின்னர் ஏதோவொரு காரணத்துக்காக அந்த விற்பனை செல்லாது என்றும் சொத்தை திருப்பித் தந்துவிடவேண்டும் என்றும் இளவர் மகன் சார்பாக அவரே வழக்குத் தொடர்ந்தார், வழக்கு தள்ளுபடியானது. அவர் மேல்முறையீடு செய்து வழக்கை நடத்தினார். வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே அந்த இளவர் மகன் இறந்துவிட்டார். ஆனால் நீதிமன்றத்துக்கு அதை தெரிவிக்காமல் அவர் தொடர்ந்து வழக்கை நடத்தினார். மேல்முறையீடு அவருக்குச் சாதமாக இருந்தது.
வழக்கு நடந்துகொண்டிருந்தபோது இளவர் இறந்துவிட்ட செய்தியைப் பின்னர் தெரிந்துகொண்டார் வழக்கில் தோற்றவர். உயர்நீதிமன்றமும் மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்பை உறுதிசெய்தது. உயர்நீதிமன்றம் வழக்கைத் தவறான அடிப்படையில் தள்ளுபடி செய்ததாக உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது. இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி, ஒரு தந்தை மகனின் சொத்துக்கு இயற்கையான வாரிசுதாரர் இல்லை. மகன், மகள், மனைவி, தாய் ஆகியோர் மட்டுமே முதல் நிலையில் உள்ள இயற்கை வாரிசுதாரர்கள். இவர்கள் நால்வரும் இல்லாத சூழலில்தான் இரண்டாம் நிலையில் உள்ள தந்தைக்குச் சொத்துபோகும்.
எனவே எப்போது இளவர் இறந்தாரோ அந்தக் கணத்திலேயே சொத்து இறந்தவரின் தாய்க்குப் போய்விடுகிறது.அதுமட்டுமல்லாமல் இளவர் எப்போது இறக்கிறாரோ அப்போதே அவருடைய காப்பாளர் என்ற வேலையும் தந்தைக்குப் போய்விட்டது. வாரிசுரிமை சட்டத்தின்படி தாய் மட்டுமே இளவர் சொத்தில் உரிமை கோரமுடியும். ஆதலால் தந்தை நடத்தியமேல்முறையீட்டு வழக்கே செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து.
நீங்கள் வாங்க விரும்பும் சொத்தின் மூல ஆவணத்தை நன்கு படித்துபார்த்தல் அவசியம். முறையாக ஆவணம் பதிவுச்செய்யப்பட்டுள்ளதா என்பதையும் தெரிந்துக்கொள்ள வேண்டும். முத்திரை கட்டணம் செலுத்தி பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா என்பதையும் ஆராய்ந்து தெளிதல் வேண்டும்.
விற்பனை ஆவணம் பதிவு செய்யும் பொது அத்துடன் இரண்டு அல்லது மூன்று படிகளையும்(Duplicate copy&Triplicate Copy) பதிவு செய்யலாம்.
அதாவது ஓரே சொத்துக்கு மூன்று அல்லது நான்கு விற்பனை ஆவணங்கள் ஒரே எண்ணில் பதிவாகும். அதில் மூல ஆவணம் மட்டுமே உரிய முத்திரைத்தாளில் எழுதப்பட்டிருக்கும். ஏனைய
"படி"(Duplicate Copy) ஆவணங்கள். ஆகஸ்ட் மாதம் 2001ம் ஆண்டுக்குமுன் பதிவுசெய்யப்பட்டவையாக இருந்தால் வெறும் 10 ரூபாய் முத்திரைத்தாளில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதற்குப்பின் பதிவுசெய்யப்பட்ட "படி"ஆவணங்கள் 20 ரூபாய் முத்திரைத்தாளில் பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்த ஆவணங்களில் முத்திரைத்தாளின் பின்புறம் "படி"ஆவணம்(Duplicate copy) I'm என்று சார்பதிவாளர் அலுவலகத்தில் எழுதித்தருவார்கள். மூல ஆவணத்திலும் எத்தனை படி ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிடுவர். இவற்றைத்தவிர மூல ஆவணத்துக்கும்(Original Deed) படி ஆவணங்களுக்கும்(Duplicate Copies) எந்த வேறுபாடும் இருக்காது. சுருக்கமாகச் சொல்வதென்றால் பார்த்துப் பார்த்து பழக்கப்பட்டவர்களைத் தவிர மற்றவர்களால் இவற்றைச் சட்டென வேறுபடுத்திப் பார்க்கமுடியாது.
இதில் வரக்கூடிய சிக்கல் என்ன தெரியுமா? மூல ஆவணத்தை உங்களிடம் காட்டாமல் படி ஆவணத்தை மட்டும் காட்டி சொத்தை உங்களைக்கு விற்றுவிட வாய்ப்பிருக்கிறது.ஒருவேளை கடைசிவரை நீங்கள் அதை கண்டுபிடிக்காமல் போய்விட்டால் உங்களிடம் படி ஆவணம் மட்டுமே இருக்கும். மூல ஆவணம் உங்களிடம் சொத்தை விற்றவரிடமே இருக்கும். அவர் அதைப் பயன்படுத்தி மறு விற்பனையோ அடமானமோ செய்துவிட வாய்ப்பிருக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக