சொத்து ஆவணங்கள்
ஆவணம்
சொத்தின் உரிமையைப் பற்றி ஆராய்ந்து வாங்கவேண்டும் என்பதுகூட பலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால், சொத்தின் உடமையை ஆராய்ந்து வாங்கவேண்டும் என்று பலர் எண்ணுவதில்லை. உரிமை(Ownership) வேறு, உடமை(Possession) வேறு. ஒரு சொத்துக்கு யார் உரிமையாளர் என்பது சார்பதிவகங்களில் பதிவு செய்யப்படும். யாருக்கு என்ன உரிமையிருக்கிறது என்பதும் பதிவு செய்யப்படும்.
அசையாச் சொத்து யார் உடமையிலிருக்கிறது என்பது நகரங்களில் வட்டாட்சியர் (Tahsildar) அலுவலகங்களிலும் கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலரின் ஆவணங்களிலும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
வட்டாட்சியர் அலுவலகங்கள் மூலமாகச் சொத்தின் உடமையை உறுதிசெய்து வழங்கப்படும் ஆவணமே பட்டா எனப்படும். ஒவ்வொரு பட்டாவிற்கும் ஒர் எண் தரப்படும். அந்த ஆவணத்தில் வட்டாட்சியரின் கையெழுத்தும் அரசு முத்திரையும் இருக்கும். நிலத்தின் புல எண்ணும் நிலத்தின் பரப்பளவும் குறிக்கப்பட்டிருக்கும்.
சென்னை போன்ற மாநகரங்களில் இப்போதெல்லாம் பட்டாவிற்கு பதில் நிலவுடமை பதிவேட்டின் சான்று நகல்களே வழங்கப்படுகின்றன. இவை நகர நில அளவைப் பதிவேட்டின் சான்று நகல்(Certificate of Extract of Town Survey Land Register) மற்றும் நிரந்தர நில அளவை பதிவேட்டின் சான்று நகல்(Certificate of Extract of Town Permanent Land Register) என்றும் கூறப்படும். இந்த நகல்களிலும் நிலத்தைப் பற்றிய குறிப்புகள் மற்றும் உரிமையாளரின் பெயர் இருப்பதோடு வட்டாட்சியரின் கையெழுத்தும் அரசு முத்திரையும் இருக்கும். குடியிருப்பு வீடுகளை வாங்குகிறபோது ஆவணங்களைப் பார்ப்பது எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு நிலவுடமை ஆவணங்களைப் பரிசோதிப்பதும் அவசியம்.
நகரங்களில் இப்போது அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவிட்டன ஒரு குறிப்பிட்ட பரப்பளவு உள்ள நிலத்தில் ஏராளமான குடியிருப்புகள் பல ஆண்டுகளாகக் காணப்படுகின்றன. இந்த குடியிருப்புகளில் வாழ்பவர்களுக்கு அவர்களுக்குரிய பிரிபடாத பாக நிலத்துக்காகத் தனி பட்டா வழங்கப்படுவதில்லை. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட நிலத்தில் 50 குடியிருப்புகள்கூட கட்டப்படுலாம். குறைந்த குடியிருப்புகள் இருந்தால் கூட்டுப் பட்டா வழங்க வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட குடியிருப்புகளை வாங்கும்போது சொத்து வரி ரசீது மின் இணைப்பு வரி ரசீது குடிநீர் வாரிய ரசீது போன்றவை உரிமையாளரின் பெயரில் இருக்கின்றனவா என்பதையும் இதற்க்கு முன் நிலத்துக்கு உரிமையாளராக இருந்தவர் பெயரில் பட்டா உள்ளதா என்றும் பார்த்துத் தெரிந்துகொள்ளுதல் வேண்டும்.
அதேபோல் நீங்கள் குறிப்பிட்ட சொத்தை வாங்கியவுடன், பட்டா,நிலவுடமைப் பதிவேட்டு நகல், சொத்து வரி, குடிநீர் வரி, மின் இணைப்பு போன்ற ஆவணங்களை உங்கள் பெயருக்கு உடனடியாக மாற்றிக்கொள்ளுதல் வேண்டும்.
இப்படி மாற்றிக்கொள்ளாவிட்டால் என்ன நடக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். அனுபவ பாத்தியதை (Adverse Possession) என்கிற ஓன்றைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்ககூடும். சொத்தின் விற்பனை ஆவணத்தைப் பதிவு செய்து உரிமையை உறுதிசெய்துகொண்ட பின்னும் 12 ஆண்டுகளுக்கு மேல் உடமையை உறுதிசெய்துகொள்ளாமல் இருந்தால், சொத்தின் உரிமையே பறிபோகலாம். பல ஆண்டுகளாகத்தான் தொடர்ந்து சொத்தின் உரிமையில் இருப்பதைத் தகுந்த ஆவணங்களால் நிருபிக்கும் ஒருவர் சொத்தின் மேல் உங்களுக்கு உரிமை பறிபோயிற்று என்ற நிலைப்பாடு எடுக்கலாம். இதன் அடிப்படையில் உரிமை பறிபோவதற்கு அனுபவ பாத்தியதை முறையீடு(Claim of Adverse Possession) தான் காரணம். எனவே உரிமையைச் சரிபார்த்து வாங்குவது போல் சொத்தின் உடமையையும் சரிபார்த்து வாங்கவேண்டும்.
கட்டடம் கட்டும் நிலங்களுக்குப் பட்டா மற்றும் சொத்து வரி ரசீது பார்பது போல, விவசாய நிலங்களுக்கு உடமை ஆவணங்கள் வேறு உண்டு. கிராமங்களில் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) என்று ஒன்று நடக்கும். எந்தெந்த விவசாய நிலங்கள் யார் பெயரில் இருக்கின்றன அல்லது யார் பெயருக்கு மாற்றம் பெற்றுள்ளன என்பதை இந்த ஜமாபந்திகளில் உறுதிசெய்வார்கள்.
அப்படி உறுதி செய்யப்பட்டதால், அவை வட்டாட்சியர்களின் ஆவணங்களில் பதியப்படும். அதன் சான்று நகல் செட்டில்மெண்ட் சிட்டா(குறிப்பேடு)எனப்படும்.விவசாய நிலம் யார் பெயரில் இருக்கிறது அதில் என்ன பயிர் விளைகிறது என்பதை உறுதிசெய்து தரப்படும் ஆவணம் அடங்கல் எனப்படும்
கருத்துகள்
கருத்துரையிடுக