பத்திரபதிவு விளக்கம்
உங்களுக்கு சொத்தை விற்க முன் வருபவர், ஒரு விற்பனை ஆவணம் வாயிலாகத்தான் அதை அடைந்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. வேறுசில வகையிலும் அவர் அந்தச் சொத்துக்கு உரிமையாளராக ஆகியிருக்ககூடும். அவருடைய தாயோ, தந்தையோ,தாத்தா,பாட்டி அல்லது வேறு நெருக்கமான உறவினர் எவருமோ, சொத்தை அவருக்கு அளித்திருக்ககூடும். இது அறுதியாவணம் (Settlement deed) என்று குறிப்பிடப்படும். இந்த ஆவணத்தின் மூலம் ஒருவர் சொத்தின் மீது பரிபூரண உரிமை அடைய முடியும். அப்படி பரிபூரண உரிமையை அவர் அடைந்தாரா என்பதைச் சொத்தை வாங்ககூடிய நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதை எப்படி உறுதிப்படுத்திகொள்வது? அது ஒன்றும் சிரமமான காரியம் இல்லை. அந்த ஆவணத்தை நன்றாக ஆழ்ந்து படித்தாலே உணர்ந்துகொள்ள முடியும்.
சொத்தை இப்படி அறுதியாவணம் மூலம் எழுதிக் கொடுப்பவர்கள் பூரண உரிமையுடன் தரலாம். அல்லது தங்களுக்கு வாழ்நாள் உரிமையை நிறுத்திக்கொண்டு சொத்தினைத் தரலாம்,அல்லது வேறு ஏதேனும் கட்டுப்பாடுகள் விதித்திருக்கலாம்.
குறிப்பிட்ட சொத்தின்மேல் அறுதியாவணத்தில் வாழ்நாள் உரிமையை நிறுத்திக்கொண்டிருந்தால், எழுதிக் கொடுப்பவர் இன்னும் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.ஏனெனில் எழுதிக் கொடுப்பவருடைய வாழ்நாளுக்குப் பிறகுதான் விற்பவருக்குப் பூரண உரிமை சொத்தின் மீது வரும். இன்னும் சிலர், இரண்டு தலைமுறைகளுக்குக்கூட வாழ்நாள் உரிமையை தந்திருப்பார்கள். இதை உற்றுத்தெளிவது அவசியம். அப்படியிருப்பின், வாழ்நாள் உரிமை பெற்றவர்களின் இறப்புச் சான்றிதழைப் பார்த்து மட்டுமே, சொத்தின் உரிமையாளர் பூரண உரிமை பெற்றுவிட்டார் என்று உறுதிசெய்ய முடியும்..
சொத்து அடமானத்தில் இருக்கிறது, அந்த அடமானத்தை மீட்டு நீ பூரண உரிமையை அடையவேண்டும் என்று ஒரு கட்டுபாடு இருக்கலாம். இந்தச் சொத்தை வாங்கும்போது, அந்த அடமானத்தை இவர் மீட்டுவிட்டாரா என்று வாங்கியவர் உறுதிசெய்துகொள்ள வேண்டும். வாழ்நாள் உரிமை கட்டுப்பாட்டுக்குள், அடமானம் கட்டுப்பாட்டுக்கும் முத்திரைத்தாள் மாறுபடும். சரியான அளவில் இக்கட்டணம் அறுதியாவணத்தில் செலுத்தப்பட்டிருக்கிறதா என்றும் பார்ப்பது அவசியம்.
இந்த வாழ்நாள் உரிமையை புரிந்துகொள்ளாமலோ, அடமானம் மீட்கப்பட்டதா என்பதை உறுதிசெய்துகொள்ளாமலோ நீங்கள் சொத்தை வாங்கிவிட்டால், மறுபடியும் வக்கில்தான், வழக்குதான், விஜயத்தின்.
விடுதலை ஆவண(Release deed) அடிப்படையிலும் ஒருவர் சொத்தின் உரிமையாளராக இருக்கலாம். இருவர் அல்லது அதற்குமேல் கூட்டாக ஒரு சொத்துக்கு உரிமையாளர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்களில் ஒருவரோ அல்லது சிலரோ ஒருவர் பெயருக்கோ அல்லது சிலர் பெயருக்கோ சொத்தின் மீதுள்ள உரிமை முழுவதுமாக விட்டுக்கொடுத்துவிடலாம். கூட்டாண்மை நிறுவனத்தில் உள்ள கூட்டாளிகளுக்குள்ளும் இப்படி விடுதலை ஆவணம் எழுதப்படலாம். மரபுமுறை இறங்குரிமை (inheritance) அடிப்படையில் தந்தை அல்லது தாயின் சொத்தில் உரிமைபெற்ற உடன் பிறந்தவர்களுக்கு இடையில் விடுதலை ஆவணம் எழுதப்படலாம். இப்படி எழுதி, பதிவு செய்யப்பட்ட ஆவணம் விடுதலை ஆவணம்(Release deed) எனப்படும்.
எந்தக் கட்டுப்பாடும் தடையும் இல்லாமல் விடுதலை ஆவணத்தின்படி உங்களுக்கு விற்கக்கூடியவர் சொத்தின்மீது உரிமை அடைந்திருக்கிறாரா என்பதையும் உரிய முத்திரைக்கட்டணம் செலுத்தப்பட்டதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
குடும்பச் சொத்தை குடும்பத்திலுள்ள எல்லோரும் பாகப்பிரிவினை செய்துகொள்வது உண்டு. இது பாகப்பிரிவினை ஆவணம் (Partition deed) எனப்படும். குடும்பச் சொத்து என்னென்ன அவற்றில் எந்தெந்தச் சொத்து யார் யாருக்கு, என்பது போன்ற விவரங்கள் பாகப்பிரிவனை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த ஆவணம் மூலமாக நீங்கள் சொத்து வாங்குவதாக இருந்தால் இரண்டு செய்திகளை உறுதிசெய்துகொள்ள வேண்டும். குடும்பத்துக்கு அல்லது குடும்பத்தில் இருக்கும் ஒரு நபருக்கு இந்தச் சொத்து முறைப்படி எந்தச் சட்ட சிக்கலும் இல்லாமல் வந்ததா என்பதை ஆராய்ந்து தெளிவது ஒன்று. அந்த ஆவணத்தின் அடிப்படையில், உங்களுக்கு விற்க முற்படும் நபருக்கு அந்த குறிப்பிட்ட செத்தால், பூரண உரிமை உள்ளதா என்பதை தெரிந்துகொள்வது பற்றற்று.
சில சமயங்களில் குடும்ப பாகப்பிரிவினை ஒப்பந்தத்தை பதிவு செய்யாமலும் இருக்கலாம். பஞ்சாயத்தார்கள் அல்லது குடும்பப் பெரியவர்களின் முன்னிலையில் பேசி ஏற்கனவே சொத்தைப் பிரித்து தனித்தனியாக அனுபவித்துக்கொண்டிருப்பதை பின்னொரு நாளில் ஆவணமாக எழுதி உறுதிசெய்துகொள்வார்கள். இதைக் கூர்சீட்டு(Coorchit) என்று குறிப்பிடுவர். இதன் அடிப்படையில் அவரவர் பெயருக்குத் தனித்தனியாகப் பட்டா வாங்கிக்கொள்வார்கள் கூர்சீட்டு அடிப்படையில் வந்த சொத்து என்று சொன்னால் எச்சரிக்கையுடன் படித்துப் பல செய்திளை அறிந்துகொள்ள வேண்டியிருக்கும்.
சிலர் உயில் அடிப்படையில் வந்த சொத்து என்று விற்க முன்வருவார்கள். குறிப்பிட்ட சில இடங்களில் உள்ள சொத்து என்றால் அந்த உயிலினை நீதிமன்றத்தில் தாக்கல்செய்து அதற்கான முத்திரைக் கட்டணம் செலுத்தி உயிலின் உண்மையை நிருபிக்க வேண்டும். நீதிமன்றம்(Order of probate) உயிலின் மூல மெய்ப்பிதழ் வழங்கினால் சொத்துக்களை விற்கமுடியும்.
சொத்துக்கள் உயில் அடிப்படையில் வந்ததாக இருந்தால் அதன் நம்பகத்தன்மையைப் பலவிதங்களில் உறுதிசெய்துகொள்ள வேண்டும். உயிலைப் பொருத்தவரையில் எழுதியவரின் இறப்புக்குப் பின்னரே அது நடைமுறைக்குவரும். உயில் பதிவுசெய்யப்பட்ட வேண்டும் என்பது அவசியமில்லை. பதிவுசெய்ய விரும்பினால் பதிவுக் கட்டணம் மட்டும் செலுத்திப் பதிவு செய்யலாம். அதற்கு முத்திரைக் கட்டணம் இல்லை.
ஒருவர் எத்தனை உயில் வேண்டுமானாலும் மாற்றிமாற்றி எழுதலாம். ஆனால் கடைசியாக எழுதிய உயில் மட்டுமே சட்டப்படி செல்லும். பல சொத்துக்களுக்கு ஒரே உயில்கூட எழுதலாம். அசையாச் சொத்துக்களை உள்ளடக்கியும் உயில் எழுதலாம். உயிலை ரத்து செய்யாமல்கூட உயில் இணைப்பு (Codicil) எழுதலாம்.
ஒர் இஸ்லாமியர் உயில் எழுதுவதாக இருந்தால் அவருடைய சொத்தில் 1/3பங்கினை மட்டுமே உயில்வழி எழுதமுடியும் மீதமுள்ள 2/3பங்கு சொத்து அவரது மறைவுக்குப்பின் அவரது வாரிசுதாரர்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி பிரிந்துசெல்லும். கிறித்துவர்கள் உயில் எழுதக் கட்டுப்பாடுகள் இல்லை.
இஸ்லாமியர்களுக்கு ஷிபா என்று சொல்லக்கூடிய நன்கொடை மூலமாகச் சொத்து வர வாய்ப்புண்டு. எவ்விதக் கைமாறும் இல்லாமல் இஸ்லாமியர் ஒருவர் மற்றொருவருக்கு முழுச் சொத்தையோ சொத்தின் பிரிபடாத பாகத்தையோ நன்கொடையாகத் தரலாம். நன்கொடையாகத் தந்த சொத்தைப் பெற்றுகொண்டதாகப் பெறுபவரும் உறுதிசெய்யவேண்டும்.
சொத்தைத் தருபவர் பெறுபவருக்கு அதை ஒப்படைத்துவிடவேண்டும். இதன் வாயிலாக நன்கொடை பெற்றவர் சொத்துக்குப் பூரண உரிமையாளராகிறார். இது பதிவு செய்யப்படவேண்டியதில்லை. இந்த ஆவணத்தை வைத்து பட்டா போன்ற உடமையை உறுதிசெய்யும் ஆவணங்களை பெற்றுகொள்வார்கள
இதுதவிர பரிவர்த்தனைப் பத்திரம்(Exchange Deed) என்றும் ஒன்று உண்டு. தங்களின் சொத்தைக் கொடுத்து அதற்குப் பதிலாக இன்னொருவர் சொத்தை வாங்கிக்கொள்வது பரிவர்த்தனை எனப்படும்.
மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் எதுவாக இருந்தாலும் இந்த ஆவணங்கள் தவிர அவற்றின் தாய் ஆவணங்கள் மற்றும் மூல ஆவணம் கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டும். மிகக் குறைந்த அளவு முப்பது ஆண்டுகளுக்கு உண்டான ஆவணங்களைப் பார்த்து உறுதி செய்துகொள்வது நல்லது. சொத்து வாங்கும்போது தாய் ஆவணங்கள் மற்றும் மூல ஆவணம் அனைத்தையும் சேர்த்து வாங்கிக்கொள்வது அவசியம். ஒரு வேளை தாய் ஆவணங்களின் மூல நகல்கள் கிடைக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும் அவற்றின் பிரதி(xerox) நகல்களையாவது பெற்றுக்கொள்ள வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக